KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Monday, September 19, 2011

ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றத்தின் பொதுக்குழு - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வுகள்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் !!!



எமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் நான்காவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் நோன்பு பெருநாள் ஒன்றுகூடல், கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியன்று, லண்டன் புறநகர பகுதியான ஹூலி என்ற கிராமத்தில், பொதுக்குழு உறுப்பினர்களின் திரளான ஒன்றுகூடலுடன் சிறப்புற நடந்து முடிந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் இறைவனுக்கே!



கூட்ட நிகழ்வுகள்: 
கூட்டத்திற்கு எம் மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். மன்ற ஒருங்கின்னைப்பாளர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.



மன்றச் செயலாளர் ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.



மன்றத்தின் கல்வி குழு ஒருங்கின்னைப்பாளர் சகோதரர் சிராஜ் மஹ்மூத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



பின்னர், மன்றத் தலைவரும், கூட்டத் தலைவருமான டாக்டர் செய்யித் அஹ்மத், மன்ற துணைத்தலைவர் பொறியாளர் அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர். இப்பொதுகுழுவின் நிகழ்சிகளை மன்றத்தின் செயலாளர் ஷாகுல் ஜிப்ரி கரீம் தொகுத்து வழங்கினார்.

தலைவர் உரை: 
பின்னர் கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். அதில் மன்றத்தின் கடந்த கால பணிகள் குறித்தும், எம் மன்றத்தின் திட்டமான முதலுதவி குறித்தும் அதற்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு மிக அழகுடன் விளக்கினார்கள். இந்த முதலுதவி திட்டம் வெற்றி அடைய காரணமாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.



துணை தலைவர் உரை: 
பின்னர் மன்ற துணைத்தலைவர் பொறியாளர் அபூபக்கர் அவர்கள் தனது உரையில் அவர்களது சவுதி அரேபியா பயணத்தின் போது தான் கலந்துகொண்ட காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு கூட்டத்தை பற்றியும் அவர்களுது செயல்பாடுகளை பற்றியும் எடுத்துரைத்தார்கள். நம் மன்றத்தால் நடத்தப்படும் திட்டங்கள் மிகுந்த தரத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும், அதன் மூலம் நாம் பிற்காலத்தில் அடைய இருக்கிற பலன்களையும் அழகுடன் எடுத்துரைத்தார்கள்.



வரவு - செலவு கணக்கறிக்கை: 
பின்னர், சென்ற கூட்ட நடப்புகள் மற்றும் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் சதகதுல்லாஹ் குளம் அவர்கள் விளக்கிப் பேசினார். மன்றம் சார்பில் நடைபெற்ற முதலுதவி முகாம் குறித்தும், அதன் தொடர் பயிற்சி முகாம்களை எவ்வாறு செயல்படுத்துவது என்றும் விளக்கம் அளித்தார்கள்.



கலந்துரையாடல்: 
பின்னர் பொருளாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க மன்ற உறுப்பினர்கள் சிறு குழுக்களாக பிரிந்து மன்றத்தின் அடுத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடந்தினார்கள். பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மன்றத்தின் அடுத்த திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

மன்றத்தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் அவர்களின் திட்டமான காயல் கல்வி அறிவு மன்றம் - 'Kayal Educational Forum' குறித்தும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்றும் விளக்கம் அளித்தார்கள். அந்த திட்டத்தை உறுப்பினர்கள் அனைவரும் சிறு விவாதத்துக்கு பின்னர் ஆமோதித்து ஏற்றனர்.



பிறகு மதிய தொழுகைக்கு பின்னர் உணவு விருந்தோம்பல் நடைபெற்றது.

அதன் பின்னர் காயல் மாநகரின் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நகராட்சி தேர்தல் குறித்தும் சூடான விவாதங்கள் நடைபெற்றன. டாக்டர் அபு தம்பி அவர்கள் ஒரு நல்ல நகராட்சியின் அவசியத்தையும் அதன் மூலம் நாம் அடைய இருக்கின்ற பலனையும் விவரித்தார்கள்.

உணவு இடைவேளைக்கு பின்னர் மழலை செல்வங்களின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை மன்றத்தின் பெண்கள் பிரிவு பிரிதிநிதி Mrs. Azzah Noohu Niyaz அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை தொடர்ந்து சிறார்களின் இஸ்லாமிய நிகழ்சிகள் நடைபெற்றன. பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு அளிக்கப்பட்டது.



நகர மரபுச்சொல் வினாடி-வினா போட்டி: 
சிறார்களின் நிகழ்சிகளை தொடர்ந்து, வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.

தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது. போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இறுதியாக பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 01: 
காயல் கல்வி அறிவு மன்றம் (Kayal Educational Forum) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் காயல் மாநகரில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களில் செயல்படுதுவதென்றும், அதன் மூலம் மாணவ - மாணவிகளின் தன்னம்பிக்கை, சுய முடிவு எடுக்கும் ஆற்றல், தன்னலமற்ற சேவை, பாடங்களின் புரிந்து படித்தல், சுத்தம் மற்றும் சுகாதாரம், உலக அறிவு, அறிவியல் சார்ந்த விளக்கங்கள், கல்வி வழிகாட்டல்கள், மற்றும் கல்வி சார்ந்த பல திட்டங்களை இந்த அமைப்பின் மூலம் நடைமுறைபடுதுவதென்றும் தீர்மானிக்கபட்டது.

தீர்மானம் 02: 
காயல் மாநகரில் உள்ள தெருக்களின் குவிந்துள்ள குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதென்றும், துவக்கமாக இரு தெருக்களை தேர்வு செய்து அதற்குரிய நடைமுறைகளை எவ்வாறு விரைந்து அமுல்படுதுவதென்றும் என்று தீர்மானிக்கபட்டது.

தீர்மானம் 03: 
எம் மன்றத்தின் பெண் உறுப்பினர்களின் கோரிக்கையான பெண்கள் கல்வி நிலையங்களின் கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு எம்மன்றதின் சார்பில் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அதை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தீர்மானம் 04: 
எமது மன்றத்தின் முதலதுவி பயிற்சி முகாமை தொடர்ச்சியாக மாதம் ஒரு முறை நமதூரில் அமைந்துள்ள கே.எம்.டி. மருத்துவமனையில் சிறு குழுக்களாக நடத்துவுதென்றும், இந்த பயிற்ச்சியை நமதூரை சார்ந்த குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகம்மது அபூபக்கர் அவர்கள் நடாத்தி தர இசைந்துள்ளமைக்கு இப்பொதுகுழு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகின்றது.

தீர்மானம் 05: 
நமது மன்றம் சார்பில் அண்மையில் காயல்பட்டினம் நகரில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில், மருத்துவ நிபுணர் குழுவை கொண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான முதலுதவி செயல்முறை பயிற்சி முகாமை வெற்றிகரமாக நடத்த உதவிய WWW.KAYALNEWS.COM, WWW.KAYALTODAY.COM, காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் சகோ.எம்.ஏ.கே. ஜைனுல் ஆபிதீன் மற்றும் சகோ. உ.ம. ஷாகுல் ஹமீது அவர்களுக்கும், இந்த பயிற்சியின் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட நமதூரை சார்ந்த குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகம்மது அபூபக்கர் அவர்களுக்கும் இம்மன்றம் தனது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 06: 
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாட்டை காயல் மாநகரில் நடத்தி அதன் முலம் காயல்பட்டினத்தை உலகறிய செய்தமைக்கு இப்பொதுகுழு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 07: 
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் நடத்தப்பட்டு வரும் காயல் மாநகர விளையாட்டு போட்டிகளின் மூலம் ஓற்றுமை நிறைந்த ஒரு விளையாட்டு சமுதாயத்தை உருவாக்கிய சகோ. அலி பைசல் அவர்களுக்கு இப்பொதுகுழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 08: 
இக்ராஃவின் புதிய தலைவர் டாக்டர் இத்ரிஸ் மற்றும் நிர்வாக குழுவிற்கு இப்பொதுகுழு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 09: 
தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள நமது எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கும், நமதூரில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இப்பொதுகுழு தனது மனமார்ந்த பாராட்டு மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றது.

இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் நமதூர் மாணவ சமுதாய முன்னேற்றத்திற்கு முயற்சி எடுத்து வரும் காயல் ஃபஸ்ட் டிரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்வி சங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 10: 
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி காயல் மாணவ மாணவிகளின் சாதனைகளுக்கு ஊக்கம் மற்றும் உற்சாகம் அளித்து வருவதற்கு இப்பொதுகுழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி காயல் மாணவ மாணவிகளின் சாதனைகளுக்கு ஊக்கம் மற்றும் உற்சாகம் அளித்து வருவதற்கு இப்பொதுகுழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 11: 
காயல்பட்டினம் கடற்கரையை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்துவதற்காக காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும், செயல்திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற இப்பொதுகுழு மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறது. மேலும் எம்மன்றதின் திட்டவடிவை சங்கத்தில் சமர்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 12: 
சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு அமைப்புக்கு, இப்பொதுகுழு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகின்றது.

தீர்மானம் 13: 
நமதூர் நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை பொதுவிவாதத்துக்கு எடுத்து அதன் சாதக மற்றும் பாதகங்களை கலந்து ஆலோசித்து ஒரு இறுதி முடிவை எட்ட வேண்டும் என்று இப்பொதுகுழு நகராட்சி மன்றத்தை மிகுந்த தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகின்றது.

தீர்மானம் 14: 
வருகின்ற நகராட்சி தேர்தலை முன்னிட்டு காயல்பட்டினம் ஐக்கியப்பேரவையின் கலந்தாலாசோனைக் கூட்டத்தில் , ஜமாஅத் மூலமாக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பேரவையின் தீர்மானத்தை இப்பொதுகுழு வரவேற்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகின்றது .

தீர்மானம் 15: 
காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டும் முகமாக " நகராட்சி தேர்தல் வழிகாட்டு அமைப்பு" - ' MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - (MEGA)' மற்றும் 'நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு' என்ற அமைப்புகளுக்கு இந்த பொதுகுழு தனது முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், அந்த இரு அமைப்புகளும் ஓர் குடையின் கீழ் செயலாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இப்பொதுகுழு கேட்டு கொள்ளுகின்றது.

தீர்மானம் 16: 
காயல் மாநகரில் துணைமின் நிலையம் அமைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட காயல்பட்டினம் ஐக்கிய பேரவையை இம்மன்றம் தனது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.



மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.