KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Friday, July 1, 2011

ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் முதலுதவி பயிற்சி முகாம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!

காயல்பட்டினத்தில், பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் 26.06.2011 அன்று காலை 10.00 மணிக்கு நடத்தப்பட்டது. ஈரோடு ஜீவன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பயிற்சியளித்தனர்.

முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் முன்னிலை வகித்தார். காயல்பட்டினத்தைச் சார்ந்த - குழுந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி, டாக்டர் ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

ஹாஃபிழ் எச்.ஏ.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர், முதலுதவி குறித்து அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி டாக்டர் முஹம்மத் தம்பி விளக்கிப் பேசியதோடு, இப்பயிற்சி முகாமை வழிநடத்தும் ஈரோடு ஜீவன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் குறித்து அறிமுகவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, டாக்டர் தம்பியின் மகனும், குழுந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணருமான டாகடர் முஹம்மத் அபூபக்கர் உரை நிகழ்த்தினார்.


பின்னர், அசைபட உருப்பெருக்கி துணையுடன், டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் பயிற்சி முகாமைத் துவக்கினார்.


அன்றாட வாழ்வில் பொதுமக்கள் எதிர்பாராத விதமாக சந்திக்கும் சாலை விபத்துகள், விபத்துகளின்போது ஏற்படும் இரத்தக்கசிவு, விஷப் பிராணிகள் கடித்தல், குழந்தைகள் நாணயம் உள்ளிட்ட திடப்பொருட்களை வாயில் போட்டு விழுங்குதல், வலிப்பு, தீக்காயம், திடீர் மயக்கம், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி (ஹார்ட் அட்டாக்) உள்ளிட்ட நிகழ்வுகளின்போது பொதுமக்கள் எவ்வாறு முதலுதவி செய்துகொள்வது என்பது பற்றி அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் அவர் விவரித்தார்.

பின்னர், பயிற்சிக்குத் தேர்வான ஆண்கள் மற்றும் பெண்கள் 150 பேரை தனித்தனியே மேடைக்கழைத்து, பயிற்சி உபகரணங்களைக் கொண்டு, அவர்களுக்கு பயிற்சியளித்தார்.


அதனைத் தொடர்ந்து, முதலுதவி குறித்த பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன், டாக்டர் முஹம்மத் அபூபக்கர், டாக்டர் தம்பி ஆகியோர் விளக்கமளித்தனர். சிறந்த கேள்வி கேட்ட பார்வையாளர் ஒருவருக்கு காயல்நியூஸ் டாட் காம் வலைதளத்தின் சார்பில் ஐநூறு ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன், லண்டனிலிருந்தவாறு தொலைபேசி வழியே அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், இந்நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் உள்ளிட்ட ஜீவன் அமைப்பின் மருத்துவக் குழுவினர், சிறப்பு அழைப்பாளர்கள், தலைமை - முன்னிலை வகித்தோர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.


நிறைவாக, காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் முகாம் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.

நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.


நிகழ்ச்சிகளை, இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ தொகுத்து வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை காயல் நியூஸ், காயல் டுடே வலைதள நிர்வாகத்தினர் மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் இணைந்து செய்திருந்தனர்.