KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Wednesday, June 15, 2011

முதலுதவி குறித்து நகரில் செய்முறை பயிற்சியுடன் விழிப்புணர்வு! அண்மையில் நடத்திட ஐக்கிய ராஜ்ஜிய பொதுக்குழு முடிவு!!



பல்வேறு சம்பவங்களின்போது முதலுதவிகளை மேற்கொள்வதெப்படி என்பது குறித்து, அது தொடர்பான நிபுணர்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சியுடன் காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏப்.30இல் நடைபெற்ற ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற பொதுக்குழு முடிவு செய்துள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று சிறப்புற நடந்து முடிந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் இறைவனுக்கே!

கூட்ட நிகழ்வுகள்: 

கூட்டத்திற்கு எம் மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். ஜே.ஏ.அப்துல் ஹலீம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர், மன்றத் தலைவரும், கூட்டத் தலைவருமான டாக்டர் செய்யித் அஹ்மத், மன்ற துணைத்தலைவர் ஜனாப் லண்டன் அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர். மன்றம் துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான மன்றத்தின் செயல்பாடுகள், இனி வருங்காலங்களில் மன்றம் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து அவர்கள் தமதுரையில் விளக்கிப் பேசியதோடு, ஓய்வற்ற பணிச்சுமைகளுக்கிடையிலும், ஒன்றுகூடுவதற்காகக் கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விடாமல் வந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 






பின்னர் மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் ஸதக்கத்துல்லாஹ் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.

கலந்துரையாடல்: 

பின்னர் திறந்தவெளி கலந்துரையாடல் நடைபெற்றது. ஷாஹுல் ஹமீத் ஜிஃப்ரீ கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். மறுபுறம் டேபிள் டென்னிஸ் விளையாட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது. 









பிறகு, மதிய உணவு விருந்தோம்பல் நடைபெற்றது. சுவையோடு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மதிய உணவை உறுப்பினர்கள் ஆர்வத்துடன் உட்கொண்டனர்.

நகர மரபுச்சொல் வினாடி-வினா போட்டி: 

உணவு இடைவேளைக்குப் பின், வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி நாம் தாயகம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது. 






தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது. போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இலவச பள்ளிச் சீருடை / பாடக்குறிப்பேடு ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் இக்ராஃ தலைமையில் பொதுநல அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், பள்ளிக்கூடங்களில் பயிலும் ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித்தொகை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து விஷயங்களில் உதவ விரும்பும் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இறுதியாக பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 01 - அமைப்பு சட்ட விதிகள் உருவாக்கம்: 
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் அமைப்பிற்கு அமைப்பு சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அது கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

தீர்மானம் 02 - வரவு-செலவு கணக்கறிக்கை: 
மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்தது.

தீர்மானம் 03 - முதலுதவி குறித்த விழிப்புணர்வு: 
காயல்பட்டினம் நகரில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை விரைவில் நடத்துவதென்றும், அதில் முதலுதவி குறித்து அது தொடர்பான நிபுணர் குழுவைக் கொண்டு செய்முறை பயிற்சிகளுடன் பொதுமக்களுக்கு விளக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நடைபெறும் இடம், காலம் குறித்து விரைவில் அறியத்தரப்படும்.

இது விஷயத்தில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நீரிழவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் அபூபக்கர் அவர்களை மன்றம் மனதாரப் பாராட்டி, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 04 - மன்றம் அரசுப்பதிவு: 
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் (KWAUK) முறைப்படி அரசுப்பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, இது அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பாக செயல்படும்.

தீர்மானம் 05 - உண்டியல் நிதி சேகரிப்பு: 
நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடும் பொருட்டு மன்றத்திற்கு கூடுதல் நிதியாதாரத்தை உருவாக்கும் நோக்கில், மன்ற உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு உண்டியல் வழங்குவதெனவும், ஒவ்வோர் ஆண்டின் இரண்டாம் கால் பகுதியிலும் உண்டியல் திறக்கப்பட்டு, நிதியாதாரம் மன்றக் கணக்கில் சேர்க்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 06 - புற்றுநோய் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளும் மன்றங்களுக்கு பாராட்டு: 
புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை தொடராக நடத்தி வரும் கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள்,

புற்றுநோய் குறித்த தகவல் சேகரிப்பை வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கும் ரியாத், தம்மாம், ஜித்தா காயல் நற்பணி மன்றங்கள்,

“புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு தயாரித்து காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்களித்த ஜித்தா காயல் நற்பணி மன்றம்,

நகரில் புற்றுநோய் பரவல் குறித்த காரணிகளை ஆய்வு செய்து வரும் Cancer Fact Finding Committee - CFFC குழுமம்,

காயல்பட்டினம் உடல்நலன் ஆய்வு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் வடஅமெரிக்க காயல் நல மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுக்கு எம் மன்றம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் நகர்நலப் பணிகள் சிறப்புற வாழ்த்துகிறது.

தீர்மானம் 07 - மாணவர்களுக்கு வாழ்த்து: 
நடைபெற்று முடிந்துள்ள 10ஆம், 12ஆம் வகுப்பு அரப் பொதுத் தேர்வுகளில் நமதூர் மாணவ-மாணவியர் நன்மதிப்பெண்கள் பெற்று, மாநில, மாவட்ட அளவில் சாதனைகள் புரிய எம் மன்றம் வாழ்த்துகிறது.

தீர்மானம் 08 - ஐக்கியப் பேரவைக்கு வேண்டுகோள்: 
நகர்நலன் கருதி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை அனைத்து ஜமாஅத்துகளின் நேரடி நிர்வாக மற்றும் பிரதிநிதித்துவ சபையாக மாற்ற வேண்டுமெனவும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்களை அனைத்து ஜமாஅத்துகளிலிருந்தும் - வார்டுகளிலிருந்தும் தேர்ந்தெடுத்து, பேரவையை வலுப்பெறச் செய்ய வேண்டுமெனவும் பேரவை நிர்வாகத்திற்கு எம் மன்றம் கோரிக்கை வைக்கிறது.

தீர்மானம் 09 - சிங்கை கா.ந.மன்ற புதிய நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்து: 
சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளபுதிய நிர்வாகக் குழுவினருக்கு எம் மன்றம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவர்களின் சீரிய செயல்பாட்டின் கீழ் அம்மன்றம் நகர்நலப் பணிகளில் சிறந்தோங்க வாழ்த்துகிறது.

தீர்மானம் 10 - திருவனந்தபுரம் முத்துச்சாவடி அமைய ஒத்துழைப்பு: 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காயலர்கள் தங்குவதற்காகமுத்துச்சாவடி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தைப் பாராட்டுவதோடு, அவர்களின் இந்த நல்ல முயற்சியில் எம் மன்றமும் இயன்றளவு தோள் கொடுக்கும் என தெரிவிக்கிறது.

தீர்மானம் 11 - அடுத்த கூட்டம்: 
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியன்று நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

தீர்மானம் 12 - CFFC அறிக்கை சமர்ப்பணம்: 
நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் CFFC குழுமத்தின் அறிக்கை மன்றத்தால் பெறப்பட்டது. மன்றத்தின் வேண்டுகோள் கடிதத்துடன் கூடிய ஆய்வறிக்கையை, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் விரைவில் சமர்ப்பிக்க ஆவன செய்வதென தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இதுபோன்ற ஒன்றுகூடல் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வு மேலிட அனைவரும் கூட்ட நிறைவுக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.