KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL

KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM WELCOMES YOU ALL
Email: uk@kayalpatnam.org.uk / Web: www.kayalpatnam.org.uk

Wednesday, May 5, 2010

INAUGURAL MEETING - NEWS

ஐக்கிய ராஜ்ஜியம் (யு.கே.) காயல் நல மன்றத்தின் (KWAUK - க்வாக்) துவக்கக் கூட்டம் இறையருளால், 24.04.2010 சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு, லண்டன் லாகூர் பேலஸ் அரங்கில் நடைபெற்றது.



டாக்டர் செய்யித் அஹ்மத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்துல் ஹலீம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

தவிர்க்க முடியாத பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தங்களது அன்பான அழைப்பை ஏற்று, வருகை தந்த அனைவரையும் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் வரவேற்றுப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், மன்றத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யு.கே.) வசிக்கும் காயலர்கள் ஒன்றுகூடுவதற்கு ஒரு களமாகவும், பிறருக்கு உதவும் நோக்கிலும், வேலை தேடியும், இதர தேவைகளுக்காகவும் காயல்பட்டினத்திலிருந்து யு.கே. வருகை தருவோருக்கு தகுந்த உதவிகளைச் செய்யும் நோக்கிலும், காயல்பட்டினம் நகர மக்களின் தேவைகளைக் கண்டறிந்து இயன்றளவு புர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த அமைப்பைப் பயன்படுத்தலாம் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, யு.கே.யிலுள்ள காயலர்கள் தனிப்பட்ட முறையிலும், நண்பர் வட்டங்கள் இணைந்தும் - காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி மற்றும் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில், புதிதாக இஸ்லாமைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டோருக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி மற்றும் வழிகாட்டுத் திட்டங்களைச் செய்து வரும் அறிவகம் நிறுவனத்திற்கும் செய்த ஒத்துழைப்புகள் குறித்து அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் தலைசிறந்த குழந்தை நல மருத்துவரான - நெல்லையில் மருத்துவ சேவையாற்றி வரும் டாக்டர் முஹம்மத் தம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி, கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் உரையாற்றினார். தமது இளமைக்கால அனுபவங்களை மலரும் நினைவுகளாக வெளிப்படுத்திய அவர், மருத்துவத் துறையில் டாக்டர் முஹம்மத் தம்பி தனிப்பெரும் சாதனையாளர் என்று புகழாரம் சூட்டினார். மருத்துவத் துறையில் டாக்டர் தம்பி தமக்கு நல்லதோர் ஆலோசகராகத் திகழ்ந்து வருகிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

காயல்பட்டினத்தின் பழைய சரித்திர நிகழ்வுகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு சமூக நலத்திற்காக அனைவரும் ஒன்று சேர வேண்டியது அவசியமும், காலத்தின் கட்டாயமுமாகும் என்று தெரிவித்தார்.

பின்னர், சிறப்பு விருந்தினர் டாக்டர் முஹம்மத் தம்பி அவர்களுக்கு மரியாதை செய்யும் முகமாக, கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் நினைவுப் பரிசு வழங்கினார்.



பின்னர், சிறப்பு விருந்தினர் டாக்டர் முஹம்மத் தம்பி உற்சாக உரையாற்றினார். காயல்பட்டினம் நகர மக்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவலாம் என்பன குறித்து அப்போது அவர் விளக்கிப் பேசினார். பின்னர் உறுப்பினர்கள் தமக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்.

நிறைவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், சிராஜுத்தீன் நன்றி கூற, ஹாஃபிழ் அப்துல் மத்தீன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - புதிய தலைவர்:

ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் புதிய தலைவராகவும், தற்காலிக பொருளாளராகவும் டாக்டர் செய்யித் அஹ்மத் அவர்களை இக்கூட்டம் ஏகமனதாகத் தெரிவு செய்கிறது.

உறுப்பினர்கள் பலர் தமது தவிர்க்கவியலாத பணிச்சுமைகள் காரணமாக இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமற்போனதைக் கருத்தில் கொண்டு, மன்றத்தின் பிற நிர்வாகக் குழுவை மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் தெரிவு செய்ய இக்கூட்டம் முடிவு செய்கிறது.

அடுத்த கூட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானம் 2 - கூட்ட எண்ணிக்கை:

வருடத்திற்கு 3 முறை மன்றக் கூட்டத்தைக் கூட்டலாம் எனவும், கோடை காலத்தில் இரண்டு கூட்டங்களும், குளிர் காலத்தில் ஒரு கூட்டமும் நடத்தலாம் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3 - மன்றத்தை அரசுப்பதிவு செய்தல்:

ஐக்கிய ராஜ்ஜிய நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, லாப நோக்கமற்ற அமைப்பாக மன்றத்தை அரசுப் பதிவு செய்ய இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4 - பெண் கல்விக்கு முக்கியத்துவம்:

மகளிர் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபடுவதை மன்றத்தின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5 - துளிருக்கு உதவல்:

காயல்பட்டினத்தில், இயலாநிலைக் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு இயன்றளவுக்கு முழு ஒத்துழைப்பை மன்றத்தின் சார்பில் வழங்க தீர்மானிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், மன்றத்தின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் ஓரிரு நாட்களில் தாயகம் வருகையில், ஒரு வார காலத்திற்குள் துளிர் பள்ளிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, விரிவான அறிக்கையை மன்றத்தின் அடுத்த கூட்டத்திற்குள் சமர்ப்பிக்க இக்கூட்டம் அவரைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6 - இக்ராஃ கல்விச் சேவையில் இணைதல்:

உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பாக செயல்படும் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கு மன்றம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஒருங்கிணைந்த இக்கல்விச் சேவையில் எம் மன்றமும் இணையும் பொருட்டு, இக்ராஃவின் செயற்குழுவில் எமது மன்றமும் இணைய விருப்பம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து, இக்ராஃ அலுவலகத்தில் நேரடி விஜயம் செய்து, தேவையான விளக்கங்களைப் பெற்று, விரிவான அறிக்கையை மன்றத்தின் அடுத்த கூட்டத்திற்குள் தர, தாயகம் வரும் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7 - வாழ்த்திய மன்றங்களுக்கு நன்றி:

எமது மன்ற துவக்கத்திற்கு முற்கூட்டியே வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்திய உலக காயல் நல மன்றங்களுக்கு மனமார்ந்த நன்றியை இக்கூட்டம் தெரிவித்து மகிழ்கிறது.

நகர்நலப் பணிகளில், உலக காயல் நல மன்றங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற எம் மன்றம் முழு மனதுடன் ஆயத்தமாக உள்ளதென இக்கூட்டம் விருப்பம் தெரிவிக்கிறது.

தீர்மானம் 8 - காயல்.ஆர்க் வலைதளத்தில் இணைதல்:

உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைக்கும் காயல்.ஆர்க் வலைதளத்தில் இணைய எம் மன்றம் முழு மனதுடன் விருப்பம் தெரிவித்து தீர்மானிக்கிறது.

அத்துடன், ஒருங்கிணைந்து நகர்நலப்பணிகளாற்றும் நோக்கில் ஏற்கனவே இவ்வலைதளத்தில் இணைந்துள்ள உலக காயல் நல மன்றங்களை எம் மன்றம் மனமாரப் பாராட்டுகிறது.

தீர்மானம் 9 - யு.கே. வரும் காயலர்களுக்கு உதவல்:

வேலை, கல்வி உள்ளிட்ட தேவைளுக்காகவும், இன்னபிற தேவைகளுக்காகவும் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு (யு.கே.) வருகை தருவோருக்கு முறையான வழிகாட்டுதல்கள், ஒத்துழைப்புகளைச் செய்யவேண்டும் என இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, இந்நாட்டில் வசிப்புரிமை (விசா) பெறுவதற்காக முயற்சிப்போருக்கு வழிகாட்டவும் குழு ஒன்றை அடுத்த கூட்டத்தில் அமைக்கவும் தீர்மானிக்கிறது.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஐக்கிய ராஜ்ஜியம் - யு.கே.யின் பல்வேறு தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.